ஷா ஆலம், நவ 11- தனக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என்ற வேறுபாடின்றி தொகுதியிலுள்ள அனைத்து மக்களுக்கும் தாம் சேவையாற்றப் போவதாக பூச்சோங் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் இயோ பீ யின் உறுதிபடக் கூறியுள்ளார்.
இத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் எந்த பாகுபாடும் இன்றி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொழில் நிபுணத்துவத்தை தாம் வெளிப்படுத்தப் போவதாக சிலாங்கூர் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் வாக்காளர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நான் ஒருபோதும் ஒரு சார்பு நிலைப்பாட்டை எடுக்க மாட்டேன். நீங்கள் எனக்கு வாக்களித்தீர்களா? இல்லையா? என்பது முக்கியமல்ல. அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்கள் மனதில் நீண்டகாலத்திற்கு இடம் பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
இளைஞர்களையும் பெண்களையும் கவர நாங்கள் முயன்று வருகிறோம். அவர்கள் தேசிய முன்னணி அல்லது பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவளித்தால் அவர்களின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதே சமயம், எதிர்காலத்தில் அந்த வாக்காளர்களின் மனதில் நிச்சயம் இடம் பிடிக்க முடியும் என்றார்.
பூச்சோங் தொகுதியில் இம்முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் காடீரும் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சியு ஜி காங்கும் சுயேச்சையாக குவான் சீ ஹெங்கும் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 152,861 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 14வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் வேட்பாளர் கோபிந்த் சிங் டியோ 47,635 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.


