கிள்ளான், நவ 11- பதினைந்தாவது பொதுத் தேர்தலை நடத்துவதற்காக பேரிடர் காலத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்தது பெருந்தவறு என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சாடினார்.
இத்தகைய பேரிடர்களால் பொது மக்கள் மட்டுமின்றி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட அதிகாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.
இக்காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்தது ஒரு தவறான முடிவு என நான் கருதுகிறேன். இதனால் பொது மக்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்ட அதிகாரிகள் தேர்தல் நிர்வாகிகளாகவும் பணியாற்றுகின்றனர். அதே சமயம், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமையும் அவர்களுக்கு உள்ளது என்றார் அவர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை இங்குள்ள ஜோஹான் செத்தியா தேசிய பள்ளியில் சென்று கண்டு உதவிப் பொருள்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேரிடர் ஏற்படும் பட்சத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவ தயார் நிலையில் இருக்கும்படி தன்னார்வலர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அமிருடின் சொன்னார்.
வெள்ளம் பாதித்த இடங்களில் டீம் சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் தன்னார்வலர் (செர்வ்) குழு உறுப்பினர்கள் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிடம் பயிற்சி பெற்றுள்ளதால் அவர்கள் தேடி மீட்கும் பணியில் ஈடுபடுவதற்கும் தயாராக இருக்கின்றனர் என்றார் அவர்.


