ஷா ஆலம், நவ 11- தேர்தலில் முதன் முறையாக வாக்களிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து இளையோர் மகிழ்ச்சி கொண்டாலும் அரசியல் நிலவரம் சரியாகத் தெரியாத காரணத்தால் வரும் 15வது பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது எனத் தெரியாத குழப்ப நிலையில் உள்ளனர்.
அரசியலமைப்புச் சட்டத்தில் கடந்தாண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் படி வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21இல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டதோடு இயல்பாக வாக்காளராகும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டது.
வாக்களிப்பு தொடர்பில் சிகிஞ்சான் தொகுதியிலுள்ள பல இளையோரிடம் கருத்து கேட்ட போது, பதினெட்டு வயதினருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தாங்கள் உள்ளதோடு வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதிலும் குறைவான அரசியல் ஞானத்தையும் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
முதன் முறையாக வாக்களிக்கச் செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், யாருக்கு அல்லது எந்த கட்சிக்கு வாக்களிப்பது என முடிவு செய்ய இயலாத நிலையில் உள்ளேன். பெற்றோர்களின் தேர்வுக்கு ஏற்ப எனது வாக்கையும் செலுத்துவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று விற்பனை முகவரான ஷரிபா நடிரா இஸ்மாயில் (வயது 20) தெரிவித்தார்.
ஷரிபாவின் சக பணியாளரான சித்தி நோர்ஸித்தி இஸ்மாயிலும் (வயது 20) இதே கருத்தைப் பிரதிபலித்தார். எனினும் பொதுமக்களுடன் நட்புறவான மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வேட்பாளர் தமது தேர்வாக அமையக்கூடும் என்றார்.
சுங்கை புசார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நான் ஓரளவு அறிந்துள்ளேன். பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான சைபுல்யஸான் எம். யூசுப் நாங்கள் பணிபுரியும் 2.00 வெள்ளி கடைக்கு வந்த போது அவரை நேரில் காணும் வாய்ப்பு கிட்டியது என்று அவர் தெரிவித்தார்.


