கோலாலம்பூர், நவ 11- பதினைந்தாவது பொதுத் தேர்தல் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் 25 விசாரணை அறிக்கைகளை போலீசார் திறந்துள்ளனர். அரசியல் கட்சிகளின் விளம்பரப் பலகைகள் மற்றும் பதாகைகளை சேதப்படுத்துதல், சினமூட்டும் செயலில் ஈடுபடுதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் இந்த விசாரணை அறிக்கைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.
சிலாங்கூர் மற்றும் கெடாவில் தலா நான்கு சம்பவங்கள், சரவா மற்றும் பினாங்கில் தலா மூன்று சம்பவங்கள், பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் திரங்கானுவில் தலா இரு சம்பவங்கள் மற்றும் கோலாலம்பூர், மலாக்கா, கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் 15வது பொதுத் தேர்தல் நடவடிக்கை இயக்குநர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி கூறினார்.
மலாக்கா பத்து பிரண்டாமிலுள்ள வாக்கு மையம் ஒன்றில் களேபரத்தில் ஈடுபட்டதோடு நாற்காலி, மேசைகளைக் கவிழ்த்து கொடிகளையும் பிடுங்கியெறிந்த ஆடவர் ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு நேற்று வரை 1,994 பெர்மிட்டுகள் அரசியல் கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.


