ஷா ஆலம், நவ 11- இங்குள்ள பாடாங் சாங்கி நிலத்தை மாநில அரசு விற்றுவிட்டதாக கூறப்படுவதை கோம்பாக் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் மறுத்துள்ளார்.
அந்த நிலம் கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் தனியார் வசம் இருந்து வருவதாக அத்தொகுதி வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் பிரசார செயலகம் தெளிவுபடுத்தியது.
அந்த நிலம் கடந்த 1957ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முதல் தனியார் வசம் இருந்து வருவதோடு பல முறை அதன் நில உரிமையும் மாற்றப்பட்டுள்ளது என்று அது கூறியது.
அந்த நிலத்தை மாநில அரசு விற்றுவிட்டது என்ற தேசிய முன்னணி வேட்பாளரின் குற்றச்சாட்டு வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக தன்மானத்தை விற்று பொய்யுரைக்கும் இழிவான செயலாகும் என்று அச்செயலகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
பாடாங் சாங்கி நிலம் கடந்த 1957ஆம் ஆண்டு முதல் தனியார் வசம் இருந்து வருவதால் அதன் விற்பனை தொடர்பான எந்த நடவடிக்கையிலும் மாநில அரசு ஈடுபடவில்லை என்று நேற்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
கோம்பாக் வாக்காளர்கள் உண்மை நிலவரங்களை அறிந்து வைத்திருப்பதால் வாக்குகளைப் பெறுவதற்காக கௌரவத்தை விற்கும் செயலில் வேட்பாளர்கள் ஈடுபட வேண்டாம் என்றும் அச்செயலகம் கேட்டுக் கொண்டது.


