கோம்பாக், நவ 11: கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் வாழும் பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட உதவும் திறன் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 19-ம் தேதி கோம்பாக் நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெற்றி பெற்றால் இச்சலுகையை செயல்படுத்துவார் என்ற நல்ல செய்தியும் உள்ளது.
"கூடுதல் திறன் பயிற்சியுடன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக பெண்கள் உருவெடுக்க உதவும். பெண்களுக்கு திறன் பயிற்சிகள் அளிப்பதன் வழி அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இருக்கும் வேளையில், குடும்ப வருமானத்தை அதிகரிக்கவும் முடியும்" என்று கோம்பாக் கண்ணியம் பிரகடனத்தை இன்று அறிவிக்கும் போது கூறினார்.
பெண்களின் குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவுவதற்காக, யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வகிக்கும் டாருல் ஏசான் வணிகத் திட்டத்தின் (நாடி) மூலம் ஆரம்ப மூலதனமாக RM5,000 வரையிலான நிதியை மாநில அரசு வழங்குகிறது.
இந்த உதவி திட்டம் இந்த ஆண்டு மொத்தம் RM86.1 லட்சம் நிதியுதவியுடன் 1,722 விண்ணப்பதாரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோம்பாக்கில் உள்ளூர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகர்ப்புற விவசாய நடவடிக்கைகளையும் அதிகரிப்பதாக அமிருடின் கூறினார்.
"நகர்ப்புற விவசாய நடவடிக்கைகளின் வழி உருவாக்கப்படும் உலுயாம் மற்றும் ஜாலான் கோம்பாக் போன்ற பசுமையான பகுதிகளின் திறனை நாங்கள் மதிப்பிடுவோம்," என்று அவர் கூறினார்.


