கிள்ளான், நவ 11- வெள்ளம் காரணமாக மூன்று துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் கட்டமைப்பு (எம்.பி.ஐ.) நேற்றிரவு முதல் கட்டமாக உதவிப் பொருள்களை விநியோகம் செய்தது.
தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து 50 பெட்டி கனிம நீர், உடனடி மீ, ரொட்டி போன்ற உலர் உணவுப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
இவை தவிர போர்வை, சுய தூய்மை உபகரணப் பெட்டி, சானிட்டரி நாப்கின் போன்ற பொருள்களும் துயர் துடைப்பு மையங்களில் விரைவில் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
துயர் துடைப்பு மையங்களில் பெரும்பாலும் சானிட்டரி நாப்கின் பற்றாக்குறைப் பிரச்சனையை பெண்கள் எதிர்நோக்குகின்றனர். ஆகவே, இத்தகைய அத்தியாவசியப் பொருள்களை ஏற்பாடு செய்கிறோம். இந்த பொருள்களை பகிர்ந்தளிக்கும் பணி பேரிடர் பிரிவுடன் கூட்டாக மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
மொத்தம் 211 பேர் அடைக்கலம் நாடியுள்ள ஜோஹான் செய்தியா தேசிய பள்ளி, மேரு, சுங்கை பிஞ்சாய் தேசிய பள்ளி மற்றும் கம்போங் புடிமான் சமூக மண்டபம் ஆகிய துயர் துடைப்பு மையங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்றிரவு பார்வையிட்டார்.


