ஷா ஆலம், நவ 11- சிலாங்கூர் மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை பதினைந்தாவது பொதுத் தேர்தல் தொடர்பில் 79 புகார்களை தாங்கள் பெற்றுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.
வேட்பு மனுத்தாக்கல் மையத்தில் அத்துமீறி நுழைந்தது, டிரோன் சாதனத்தை பறக்கவிட்டது, அவதூறான அறிக்கைகளை வெளியிட்டது, அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் விளம்பரப் பலகைகளை சேதப்படுத்தியது தொடர்பில் அக்காலக்கட்டத்தில் நான்கு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இது தவிர தேர்தல் பரப்புரைகள் நடத்துவதற்கு 660 விண்ணப்பங்களை தாங்கள் நேற்று வரை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவற்றில் 642 விண்ணப்பங்களுக்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம். பொருத்தமற்ற இடங்கள் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தது, இதர அரசியல் கட்சிகளின் பிரசார இடங்களில் ஒரே நேரத்தில் மோதுவது மற்றும் தாமதமாக விண்ணப்பம் செய்தது ஆகிய காரணங்களால் இதர விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றார் அவர்.
இங்குள்ள மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக அணிவகுப்புத் திடலில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் தேர்தல் முன்னேற்பாட்டு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அரசியல் கட்சி ஒன்றின் தேர்தல் நடவடிக்கை அறை பணியாளரை அச்சுறுத்திய புகாரின் போரில் 40 வயதுடைய ஆடவர் ஒருவரை போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாகவும் அர்ஜூனைடி சொன்னார்.
தாமான் பெட்டாலிங் உத்தாமாவிலுள்ள தனது வீட்டில் இரவு மணி 11.00 அளவில் அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


