ஷா ஆலம், நவ 11- கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று காண்பதற்காக கோம்பாக் தொகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளவிருந்த பிரசாரத்தை டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ரத்து செய்தார்.
தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
கோம்பாக் தொகுதியில் இன்றிரவு நடைபெறவிருந்து தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காண விரைகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி வருகிறேன். மக்கள் பிரச்சனைகளிலிருந்து விரைவில் மீளவும் பாதுகாப்பாக இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக கிள்ளான் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கிள்ளான், மேரு மற்றும் காப்பார் ஆகிய பகுதிகளுக்கு மீட்பு தளவாடங்களை மாநில அரசு உடனடியாக அனுப்பியது.


