ஷா ஆலம், நவ 11- வெள்ளத்தை எதிர் கொள்ள சிலாங்கூர் அரசு கடந்த வாரம் முதலே தயார் நிலையில் இருந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இதன் அடிப்படையில் அண்மைய சில தினங்களாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
சீரற்ற வானிலையும் வெள்ளமும் நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஏற்படும் என்ற மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்பை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் மாநில நிலையில் பல கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இம்முறை விரைவாக செயல்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு குழுவினரை நான் வெகுவாக பாராட்டுகிறேன். இதன் மூலம் சீரான மற்றும் ஒழுங்கான முறையில் அதிகமானோரை காப்பாற்றவும் அவர்களுக்கு உதவிகள் புரியவும் வாய்ப்பு ஏற்பட்டது என்றார் அவர்.
கிள்ளான் தாமான் ஜோஹான் செத்தியா தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு நேற்றிரவு வருகை புரிந்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவுக் கூடைகளை மந்திரி புசார் விநியோகித்த தோடு அவர்களுடன் அளவளாவினார். சுங்கை காண்டீல் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி அகமது முக்னியும் அப்போது உடனிருந்தார்.
நேற்று மாலை பெய்த அடை மழை காரணமாக கிள்ளான் மாவட்டத்தின் இரு இடங்களிலும் பெட்டாலிங் மாவட்டத்தின் ஒரு இடத்திலும் வெள்ளம் ஏற்பட்டது.


