அம்பாங், நவ 11- அம்பாங் தொகுதி வாக்காளர்களின் ஆதரவு பெருகத் தொடங்கியுள்ள நிலையில் ஹராப்பான் வேட்பாளரான ரோட்சியா இஸ்மாயில் புதிய உத்வேகத்துடன் பிரசாரத்தை சுறுசுறுப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் தினம் முதல் தற்போது வரை தாம் தொகுதியின் பாதி இடங்களுக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறிய ரோட்சியா, இதன் மூலம் வாக்காளர்களுக்கு தாம் பரிட்சியமாகியுள்ளதோடு ஹராப்பான் கூட்டணியின் கொள்கைகளையும் தேர்தல் கொள்கையறிக்கையையும் அவர்களிடம் சேர்க்கும் பணியும் எளிதாகியுள்ளது என்றார்.
நேற்று அம்பாங் மேவா பகுதியை இலக்காக கொண்டு நான் பிரசாரத்தில் ஈடுபட்டேன். தாமான் அம்பாங் மேவா அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றதோடு தாமான் மூலியா ஜெயாவிலும் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்றார் அவர்.
அதோடு மட்டுமின்றி, தாமான் அம்பாங் மேவாவில் பாசார் மாலாம் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களையும் சந்தித்தேன். நகர்ப்புறங்களிலும் புறநகரங்களிலும் ஆதரவு பெருகி வருவதை காண முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஹராப்பன் கூட்டணி மற்றும் சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்காக வகுத்துள்ள திட்டங்கள் குறித்த தகவல்களை துல்லியமாக சேர்க்கும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வியறிவு பெற்றவர்கள் தகவல்களை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆனால், களத்தில் இறங்கும் போதுதான் தகவல்களைப் பெறுவதில் இடைவெளி உள்ளதை உணர முடிகிறது என்றார் அவர்.
சில சமயங்களில் சமூகத் தலைவர்கள் கூட மாநில அரசின் திட்டங்களை அறிந்திருக்கவில்லை. ஆகவே மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவது மிகவும் அவசியமானது என அவர் விவரித்தார்.


