கோலாலம்பூர், நவ 10- கிளானா ஜெயா மற்றும் அம்பாங் பார்க் இடையிலான இலகு ரயில் சேவையில் (எல்.ஆர்.டி.) நேற்று தொடங்கி ஏற்பட்ட தடங்கல் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ மேலும் 40 இலவச பஸ் சேவையை ரேபிட் ஏற்பாடு செய்துள்ளது.
ரேபிட் நிறுவனத்தின் 20 பஸ்களோடு ஸ்மார்ட் சிலாங்கூர் மற்றும் மாரா லைனர் தரப்பினரின் ஒத்துழைப்புடன் கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.
தற்போது அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாள்வதற்கு 83 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரேபிட் கே.எல். சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ள ஐந்து தடங்களில் பயணிகளுக்கு சேவையை வழங்குவதற்காக மொத்தம் 120 பஸ்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் சொன்னார்.
பிரசாரானா மலேசிய பெர்ஹாட் நடவடிக்கை கட்டுப்பாட்டு மையத்தில் சோதனை மேற்கொள்வதற்காக கனடா மற்றும் சிங்கப்பூரிலிருந்து நிபுணர்கள் வருகை புரியும் போது கிளானா ஜெயாவிலுள்ள அந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு தாமும் வருகை புரியவுள்ளதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
பயணிகளின் பாதுகாப்பு கருதியும் கிளானா ஜெயா-அம்பாங் எல்.ஆர்.டி. தடத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காகவும் அவ்விரு தடங்களுக்கிடையிலான சேவை நேற்று தொடங்கி ஏழு நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக பிரசாரானா நிறுவனம் நேற்று அறிவித்தது.


