கோலாலம்பூர், நவ.10 - கடந்த வாரத்தில் 1,460 ஆக இருந்த டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 44வது தொற்றுநோய் வாரத்தில் 233 சம்பவங்கள் அல்லது 16 விழுக்காடு அதிகரித்து 1,693 ஆக உள்ளது.
இந்த வாரம் டிங்கி காய்ச்சலால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 22,101 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இதுவரை பதிவான டிங்கி சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 51,262 ஆக உள்ளது, இது 29,161 சம்பவங்கள் அல்லது 131.9 விழுக்காடு அதிகரித்துள்ளது," என்று அவர் கூறினார்.
டாக்டர் நோர் ஹிஷாமின் கூற்றுப்படி, இவ்வாண்டு டிங்கி காய்ச்சலால் 18 இறப்புகள் ஏற்பட்டு மொத்தம் 35 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், 44வது தொற்றுநோய் வாரத்தில் பதிவான ஹாட்ஸ்பாட் (ஆபத்தான) இடங்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் 56 உடன் ஒப்பிடும்போது 50 ஆக குறைந்துள்ளது என்றார்.
ஜிகா கண்காணிப்பைப் பொறுத்தவரை, 1,739 இரத்த மாதிரிகள் மற்றும் 16 சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட தாகவும், முடிவுகள் அனைத்தும் எதிர்மறையானவையாக உள்ளதாகவும் டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.


