ஷா ஆலம், நவ 10- பலர் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பினை இழக்கும் அளவுக்கு நாட்டை முறையாக நிர்வகிப்பதில் தோல்வி கண்ட தலைவர்களை நிராகரிக்கும்படி வாக்காளர்களை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் நிலைத்தன்மையையும் பொதுமக்கள் தீர்மானிக்கக்கூடிய களமாக இந்த பொதுத் தேர்தல் விளங்குவதாக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான அன்வார் கூறினார்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் தங்களின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கு சரியான முடிவை இத்தேர்தலில் எடுக்கும்படி பொதுக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் நலனுக்காக உண்மையில் போராடும் ஒரே கூட்டணி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியாகும் என்று நேற்றிரவு தம்புனில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தெரிவித்தார்.
நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டிருந்த போது நிலையான பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தத் தவறிய டான்ஸ்ரீ மொகிடின் யாசின் நிர்வாகத்தை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று அவர் சொன்னார்.
மாறாக, அச்சமயத்தில் இறப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நாட்டின் பொருளாதார கொள்கைகளையும் முறையையும் மாற்றுவதற்குரிய வாய்ப்பு அப்போதைய பெரிக்கத்தான் அரசாங்கத்திற்கு இருந்தது. ஆனாலும், அது அவ்வாறு செய்யவில்லை என்றார் அவர்.
வருமானத்திற்கான வழிகளை இழந்து வெள்ளைக் கொடிகளை ஏந்தும் அளவுக்கு மக்கள் சிரமத்தில் ஆழ்ந்திருந்த போது 70 அமைச்சர்களையும் பல சிறப்பு தூதர்களையும் நியமித்தது பெரிக்கத்தான் அரசு செய்த பெரிய தவறாகும் எனவும் அவர் சொன்னார்.


