ஷா ஆலம், நவ 10- பிரதமர் பதவியை இரு தவணைகளாக கட்டுப்படுத்தும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பரிந்துரையை பொதுமக்கள் வரவேற்றுள்ளதோடு நாட்டின் மேம்பாட்டிற்கு இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்று கூறியுள்ளனர்.
அரசு நிர்வாகத்தில் உயர்நெறியை வலுப்படுத்துவதற்கும் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை தவிர்ப்பதற்கும் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக பிரதமர் பதவியை பத்து ஆண்டுகளாக அல்லது இரு தவணைகளாக கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரையை ஹராப்பான் கூட்டணி முன்வைத்துள்ளது.
இந்த பரிந்துரை குறித்து சிகிஞ்சான் மற்றும் சுங்கை புசார் பகுதி மக்களிடம் கருத்து கேட்ட போது அவர்களில் பலர் சிறப்பான இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினர்.
ஹராப்பான் கூட்டணி கொண்டு வந்த நல்ல திட்டம் இதுவாகும். இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளாமல் போவதில் எனக்கு உடன்பாடில்லை என்று அரசு ஊழியரான நோர்ஃபரேஹான் ஓஸ்மான் (வயது 29) கூறினார்.
பல வெளிநாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் மலேசியாவிலும் அமல்படுத்தப்படுவதன் மூலம் சிறப்பான வளர்ச்சியைக் காண இயலும் என்று டுரியான் வியாபாரியான கான் கார் ஆன் (வயது 35) கூறினார்
பிரதமர் பதவியை பத்து ஆண்டுகளாக அல்லது இரு தவணைகளாக குறைப்பதன் மூலம் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை தடுக்க இயலும் என்று மெக்கானிக்கான ஹோ தென் ஹூவா (வயது 38) சொன்னார்.


