கோம்பாக், நவ 10- வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக் தொகுதியில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை தாம் பெறப் போவதில்லை என்று தொகுதி ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
அந்த சம்பளத் தொகையை புதிதாக உருவாக்கப்படும் கோம்பாக் மக்கள் சமூக நல நிதியில் தாம் சேர்க்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பளத்திற்காகவும் பதவிக்காகவும் தாம் கோம்பாக் தொகுதியில் போட்டியிடவில்லை என்றும் மாறாக, தொகுதியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் கோம்பாக்கின் கௌரவத்தை காக்கவும் இத்தேர்தலில் களம் காண்பதாக அவர் சொன்னார்.
இத்தொகுதியில் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தில் ஒரு காசைக் கூட நான் தொட மாட்டேன். அந்த பணத்தைக் கொண்டு தொகுதி மக்களின் நலன் காப்பதற்காக நிதி ஒன்றை ஆரம்பிப்பேன் என்றார் அவர்.
இந்த நிதியில் எனது சம்பளப் பணத்தை சேர்ப்பதோடு முதலீட்டாளர்களிடமிருந்தும் நிதி பெற்று கோம்பாக் தொகுதி மக்களுக்கான சமூக நலப் பணிகளை மேற்கொள்வேன் என்று அவர் மேலும் சொன்னார்.
மக்கள் வழங்கிய ஆதரவை மறந்து கட்சித் தாவிய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் செயலையும் அமிருடின் கடுமையாகச் சாடினார்.
தவளையாக மாறி தாவிச் சென்றார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் இச்செயலைக் கண்டு நாங்கள் வெட்கப்படுகிறோம். இம்முறை அவருக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஹராப்பான் வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். வாக்குச் சீட்டில் இரண்டாம் எண்ணைக் கொண்ட அமிருடினை தேர்ந்தெடுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.


