உலு லங்காட், நவ 10- உலு லங்காட் தொகுதியில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வரும் தேர்தல் பிரசாரத்தின் போது இங்கு முட்டைப் பற்றாக்குறை நிலவுவதை தாம் கண்டறிந்ததாக அத்தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் முகமது சானி ஹம்சான் கூறினார்.
ஆகவே, மாநில அரசின் மலிவு விற்பனையில் கலந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கிச் செல்லும்படி தொகுதி மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பண்டார் ரிஞ்சிங், பண்டார் தாசேக் கெசுமா, சந்தேக்ஸ் சந்தை ஆகிய இடங்களுக்கு நான் சென்றேன். அங்கு நான் சந்தித்த வாக்காளர்கள் எல்லாம் உணவுப் பொருள் விநியோகப் பற்றாக்குறை குறித்து குறைபட்டுக் கொண்டனர்.
உணவுப் பொருள் பிரச்சனையைக் கூட மத்திய அரசினால் தீர்க்க முடியவில்லை.
சிலாங்கூரைப் பாருங்கள், உணவுக் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. அவை குறைவான விலையிலும் விற்கப்படுகின்றன. முட்டை தவிர, கோழி, இறைச்சி, சமையல் எண்ணெய், அரிசி போன்ற பொருள்களும் கிடைக்கின்றன என்றார் அவர்.
உணவுப் பொருள் பற்றாக்குறை இருந்தால் சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனையில் கலந்து கொள்ளத் தவறாதீர்கள் என்று இங்குள்ள தாமான் செம்பாக்கான் லுய் பகுதியில் பிரசாரத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கோழிக்கான உச்சவரம்பு விலையை வெ. 11.40 ஆக நிர்ணயித்த மத்திய அரசின் நடவடிக்கையையும் அவர் கடுமையாகச் சாடினார். முன்பு பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் கோழியின் விலை ஒரு கிலோ வெ.5.99 ஆக இருந்தது. அப்போது விலை அதிகம் என்று குறை கூறினார்கள். இப்போது மலிவான விலையிலா விற்கப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பினார்.


