ஷா ஆலம், நவ 10- ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினராக பணியாற்றியதன் மூலம் கிடைத்த அனுபவம் ஷா ஆலம் தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரை பொது மக்களை தயக்கமின்றி சந்திக்கக்கூடிய சுபாவம் உள்ளவராக மாற்றியுள்ளது.
ஷா ஆலம் தொகுதியில் முதன் முறையாக போட்டியிடும் அஸ்லி யூசுப் பொதுமக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
நான் இந்த தொகுதியில் புதுமுகமாக இருந்தாலும் தொகுதி மக்களில் பெரும்பாலோர் எனக்கு அறிமுகமானவர்களாக உள்ள காரணத்தால் தங்கள் குறைகளைக் கேட்டறிவதற்கு அவர்கள் எனக்கு வாய்ப்பினை வழங்குகின்றனர் என்று அவர் அஸ்லி சொன்னார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என நம்புகிறேன். இருப்பினும் பொது மக்கள் மத்தியில் நான் பரிட்சியமானவனாக ஆவதற்கு அதிகமானவர்களை சந்திக்க வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில அமானா கட்சியின் துணைத் தலைவரான அஸ்லி பெரிக்கத்தான் நேஷனல், தேசிய முன்னணி மற்றும் பெஜூவாங் கட்சிகளின் வேட்பாளர்களை இத்தொகுதியில் எதிர்கொள்கிறார்.


