அம்பாங், நவ 10- வரும் பொதுத் தேர்தலில் அம்பாங் தொகுதியை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுவதை உறுதி செய்ய பிரபல ராப் பாடகரான அல்டிமேட் மற்றும் நடிகரான ஹான்ஸ் ஐசாக் ஆகியோர் தீவிரப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தொகுதி மக்கள் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அவ்விரு பிரபலங்களும் தொகுதியின் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வது கண்டு தாம் மனம் நெகிழ்ந்து போனதாக ஹராப்பான் வேட்பாளரான ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இந்த தொகுதியில் பிரசித்தி பெற்ற அல்டிமேட், ஹான்ஸ் மற்றும் பலரின் உதவியை அம்பாங் தொகுதியில் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இங்கு நான் மட்டும் பிரசாரம் செய்தால் போதாது. மற்றவர்களும் எனக்கு உதவி புரிவதன் மூலம் அம்பாங் தொகுதியின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இந்த ஐந்து நாட்களில் வாக்காளர்களிடமிருந்து இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறிய அவர், இத்தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் தாம் என்பதை இங்குள்ளவர்கள் அறிந்துள்ளனர் என்றார்.
இந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் குறித்து அம்பாங் மக்கள் நன்கு அறிந்துள்ளனர். நான் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னரே ஹராப்பான் வேட்பாளர் நான் என்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். கெஅடிலான் கட்சி வேட்பாளர் என்றார் அவர்களுக்கு நன்கு தெரிகிறது என்றார் அவர்.
சிலாங்கூர் மாநிலத்தின் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரும் வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான ரோட்சியா பார்ட்டி பங்சா மலேசியா கட்சியின் சார்பில் இத்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடும் டத்தோ ஜூரைடா கமாருடினிடமிருந்து கடும் போட்டியை எதிர்நோக்குகிறார்.



