கோலாலம்பூர், நவ 10- வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக புறநகர் மற்றும் உட்புற வாக்காளர்களின் வாக்குகள் அமையும் என்பதால் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை அந்த வாக்காளர்கள் “பொன்னாக“ கருதப்படுகிறார்கள்.
நாட்டிலுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 144, அதாவது பாதிக்கும் மேற்பட்டவை பெல்டா குடியேற்றப் பகுதிகள் உள்ளிட்ட புறநகர்களில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவை யாவும் எந்த அரசியல் கட்சியாலும் “வெள்ளை“ என வகைப்படுத்த முடியாத தொகுதிகளாக உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் அரசியல் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம், துரித நகரமயமாக்கல், கல்வி கற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பரந்த இணைய பயன்பாடு ஆகியவை தேர்தல் களத்தை பதட்டமானதாக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பதினைந்தாவது பொதுத் தேர்தல் கணிக்க முடியாத அளவுக்கு கடினமானதாக உள்ளது. சபாவிலுள்ள 25 தொகுதிகள், சரவாக்கிலுள்ள 31 தொகுதிகள் இராணுவ முகாம்கள் உள்ள தொகுதிகள் ஆகியவை குறிப்பிட்ட அரசியல் கூட்டணிக்கு இனியும் பாதுகாப்பான வைப்புத் தொகை தொகுதிகளாக இருக்க இயலாது எனவும் கருதப்படுகிறது.
பெல்டா குடியேற்றப் பகுதிகளில் தேசிய முன்னணிக்கு ஆதரவு குறைந்து வருவதை கடந்த இரு தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக ரவூப் வளாகத்தின் நிர்வாக அறிவியல் மற்றும் கொள்கை கல்விப் புலத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் சே ஹம்டான் சே முகமது ரசாலி கூறினார்.
பெல்டா பகுதிகளில் கடந்த 13வது பொதுத் தேர்தலின் போது 60.2 ஆக இந்த தேசிய முன்னணி மீதான ஆதரவு கடந்த 14வது பொதுத் தேர்தலில் 6.2 விழுக்காடாக குறைந்தது. பெல்டா தொகுதிகளில் இனியும் எளிதாக வெற்றி பெறலாம் என தேசிய முன்னணி இனியும் கருத முடியாது என அவர் சொன்னார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தங்களின் தீவிர ஆதரவாளர்கள் தவிர்த்து இளம் வாக்காளர்கள் குறிப்பாக முதன் முறையாக வாக்களிப்போரை அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பியுள்ளன என்று அவர் கூறினார்.
இதே கருத்தை பகிர்ந்து கொண்ட வட மலேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் முகமது அசுஸிடின் முகமது சானி, துரித மேம்பாடும் கல்வி வாய்ப்பும் புறநகர் சமூகத்தின் வாக்களிக்கும் பாணியை மாற்றியுள்ளது என்றார்.
வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் எந்த தொகுதியும் தங்களுக்கு பாதுகாப்பானது என எந்த கட்சியாலும் கூற இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


