ஷா ஆலம், 10 நவம்பர்: கிளானா ஜெயா இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) சேவை அமைப்பின் குறுக்கீட்டைத் தொடர்ந்து பயனர்களின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் பல முக்கிய இடங்களில் பஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் தனது சேவையைத் தொடங்கியது.
16 நிலையங்களின் இயக்கம் மூடப்பட்டதை அடுத்து பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய 20 பேருந்துகளை வழங்கிய மாநில அரசின் நேற்றைய அறிவிப்புக்கு இணங்க இது உள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"எல்ஆர்டி பயனர்களின் சுமையைக் குறைக்க சிலாங்கூர் மாநில அரசு 20 பேருந்துகளை வழங்க நேற்றைய அறிவிப்புக்கு இணங்க, இன்று காலை சேவைகள் பல முக்கிய இடங்களில் தொடங்கியுள்ளன" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.

நேற்று, கூடுதல் சேவையானது ரேபிட்கேஎல் வழங்கும் இடைநிலைப் பேருந்தின் அட்டவணையில் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒருங்கிணைக்கப் பட்டதாக அவர் விளக்கினார்.
முன்னதாக, நிலையற்ற தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்பைத் தொடர்ந்து, கிளானா ஜெயா மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களுக்கு இடையேயான எல்ஆர்டி சேவை நேற்று முதல் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரேபிட் ரயில் எஸ்டிஎன் பிஎச்டி அறிவித்தது.
இருப்பினும், கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை கோம்பாக் நிலையத்திலிருந்து டாமாய் நிலையம் வரையில், லெம்பா சுபாங் நிலையத்திலிருந்து புத்ரா ஹைட்ஸ் நிலையம் வரையிலும் மட்டுமே இயங்கும் என்று அவர் கூறினார்.


