ஷா ஆலம், நவ 9- அமைச்சர் டத்தோஸ்ரீ நோர் ஓமார் கடந்த 1995 முதல் தன் வசம் வைத்திருந்த தஞ்சோங் காராங் தொகுதியில் இம்முறை அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த பாரம்பரிய தொகுதியை தக்க வைத்துக் கொள்வதில் தேசிய முன்னணி இம்முறை சிரமத்தை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் தினம் முதல் இன்று வரை தமக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதோடு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நோர் ஓமாரின் ஆதரவின்றி தனது குழுவினருடன் மட்டும் பிரசாரம் செய்யும் நிலையில் தாம் உள்ளதாக தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹபிபா முகமது யூசுப் கூறினார்.
ஆயினும், வேட்பாளர் பட்டியலிலிருந்து விடுபட்ட நிலையிலும் அவர் சுங்கை பூலோ மற்றும் கோல சிலாங்கூர் தொகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்து வருவதாக ஹபிபாவை மேற்கோள் காட்டி மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை எளிதில் வெற்றி பெற முடியாத புதுமுகத்தை இத்தொகுதியில் நிறுத்தியது குறித்து அம்னோ கிளைத் தலைவரான ராஜா மூடா யூசப் சரோஜி பகிரங்கமாக கேள்வியெழுப்பினார்.
நாம் எளிதாக வெல்லக் கூடிய தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தஞ்சோங் காராங் தொகுதியை உதாரணம் கூறலாம். அது எளிதாக வெல்லக் கூடிய தொகுதியாகும். ஆனால் எளிதாக வெல்லக்கூடிய அந்த தொகுதியில் வேட்பாளரை மாற்றியுள்ளோம். தேசிய முன்னணியினால் எளிதாக வெல்லக் கூடிய இடத்தில் ஏன் நாம் சிரமத்தை வலிந்து வரவழைக்க வேண்டும் என அவர் சொன்னார்.
தஞ்சோங் காராங் தொகுதியில் இம்முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி சார்பில் ஹபிபாவும் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் மூடா கட்சியைச் சேர்ந்த சித்தி ராஹாயு பாஹ்ரினும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் டத்தோ டாக்டர் ஜூல்காப்ரி ஹனாபியும் போட்டியிடுகின்றனர்.


