ஷா ஆலம், நவ 9- ஷா ஆலம் வட்டாரத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப இம்மாநகரில் கூடுதல் இடைநிலைப்பள்ளிகளை நிர்மாணிப்பதற்கான தீர்மானத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கொண்டு வரும்.
இடப்பற்றாக்குறை காரணமாக தங்கள் பிள்ளைகளை வெகு தொலைவிலுள்ள பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து ஷா ஆலம் வட்டார மக்களிடமிருந்து தாம் அடிக்கடி புகார்களைப் பெற்று வருவதாக ஷா ஆலம் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் கூறினார்.
தங்கள் பகுதியில் இடைநிலைப்பள்ளி இல்லாத காரணத்தால் பிள்ளைகளை மேரு மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் போன்ற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளதாக செக்சன் யு10, யு11 மற்றும் யு12 குடியிருப்பாளர்கள் தம்மிடம் புகார் தெரிவித்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இதனால் பெற்றோர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுவதோடு அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஒரே பள்ளி நோக்கி ஒரே நேரத்தில் அதிகமான மாணவர்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
அமானா கட்சி சார்பில் இத்தேர்தலில் களம் கண்டுள்ள அஸ்லி மிஸோரி- ரோலா பல்கலைக்கழகத்தில் பொறியில் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷா ஆலம் தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் செக்சன் 16, பி.கே.என்.எஸ். மலிவு விலை வீடமைப்பு பகுதி முழுவதையும் மறுநிர்மாணிப்பு செய்வதற்கு ஆவன செய்யவுள்ளதாக அவர் முன்னதாக கூறியிருந்தார்.


