கோல லங்காட், நவ 9- கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பன் கூட்டணி சார்பில் போட்டியிடும் மணிவண்ணன் கோவிந்த் தொகுதி மக்களுக்காக ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார்.
பந்திங் மருத்துவமனை மற்றும் சுகாதார கிளினிக்குகளின் சேவைத் தரத்தை மேம்படுத்துவதும் அந்த வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
மூத்த குடிமக்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சேவையை பெறும் நிலையிலுள்ள நோயாளிகள் உள்பட அனைத்து மக்களுக்கும் விரிவான அளவில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை தாம் உறுதி செய்ய விரும்புவதாக மணிவண்ணன் கூறினார்.
இது தவிர, அடிப்படை வசதிகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளதை தாம் உறுதி செய்ய விரும்புவதோடு கோல லங்காட்டில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண விரிவான கொள்கையை அறிமுகப்படுத்தவும் தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோல லங்காட்டின் கௌரவம் எனும் தலைப்பிலான தனது கொள்கையறிக்கை முழுமையான வெள்ளப் தடுப்புத் திட்டங்கள், வடிகால்களை தரம் உயர்த்துவது மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை முறை ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றி, தொலைநோக்கும் ஆற்றலும் நிறைந்த இளைய தலைமுறையினரின் உருவாக்கத்திற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் உகந்த சூழலில் இருப்பதை தாம் உறுதி செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மகளிரின் நலன் காக்கப்படுவதற்கும் அவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் உயர்வு காண்பதற்கும் ஏதுவாக கிளப் காசே வனிதா கோல லங்காட் எனும் அமைப்பு உருவாக்கப்படும் என்றத் தகவலையும் மணிவண்ணன் வெளியிட்டார்.
விளையாட்டுத் துறையில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்காக மின் விளையாட்டுத் தொகுதி மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயத் திடல் அமைப்பதற்கும் தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தலில் கோல லங்காட் தொகுதியில் ஆறு முனைப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர் டத்தோ டாக்டர் யூனுஸ் ஹைரியிடமிருந்து மணிவண்ணன் கடும் போட்டியை எதிர்நோக்குகிறார்.


