கோம்பாக், நவ 9- மக்களுக்கிடையே தப்பெண்ணத்தையும் சந்தேக உணர்வையும் ஏற்படுத்தி அதன் விளைவாக நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் இனவாத அரசியலை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றிய போது இந்த மோசமான அணுகுமுறையை களைவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் தலைவரான அவர் சொன்னார்.
எனினும், குறுகிய காலத்தில் ஆட்சி பறிபோனதால் அந்த முயற்சிகளை தொடர முடியாமல் போனது என்று அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள இஸ்லாம் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புரிமையை ஒரு சில தரப்பினர் கூறுவது போல் யாராலும் ஒருபோதும் எதிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஆனாலும், நமது மனதில் தொடர்ந்து குழப்பம் விளைவிக்கப்பட்டு வருகிறது. சினமூட்டும் வகையில் அரசியல் தீ பற்றவைக்கப்படுகிறது. இதனால் சந்தேக மற்றும் பய உணர்வு ஏற்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய செயல்கள் நமது முன்னேற்றத்தை தடுக்கின்றன. 2018ஆம் ஆண்டில் மலாய், சீன மற்றும் இந்திய சமூகங்கள் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தின. அதன் விளைவாக இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்திராத 1எம்டிபி ஊழல் அம்பலத்திற்கு வந்தது என்றார் அவர்.
நேற்று இங்கு மூடா கட்சித் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மானுடன் கோம்பாக் இளைஞர்கள் எனும் நிகழ்வில் உரையாற்றிய போது சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னேற வேண்டும் என்ற வேட்கை நமக்கு இருக்குமானால் அடையாள அரசியல் அல்லது இனவாத அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும். சந்தேக உணர்வு இருக்கும்வரை இளையோர் மனதில் சலனம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.


