ஜோர்ஜ் டவுன், நவ 9 - ஜாலான் ஸ்காட்லாந்தில் உள்ள பினாங்கு விஸ்மா அனாக் யாத்திம் பெரெம்புவான் இஸ்லாம் தங்கும் விடுதியின் மேற்கூரை நேற்றிரவு இடிந்து விழுந்ததில் அங்கு தங்கியிருந்த மூன்று பெண்கள் காயமடைந்தனர்.
ஏழு முதல் 18 வயதுக்குட்பட்ட 30 பெண்கள் தங்கியிருந்த அந்த தங்கும் விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் குறித்து இரவு 9.42 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்ததாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சோஃபியன் சாண்டோங் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை அடைந்த போது 8, 10 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுமிகள் தங்கும் விடுதியின் கூரை இடிபாடுகளில் சிக்கி காயங்களாகியிருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டதாக அவர் சொன்னார்.
காயமடைந்தவர்கள் மற்றும் இரண்டு வார்டன்கள் உள்பட அங்கு தங்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றார் அவர்.
காயமடைந்த அந்த மூன்று பெண்களும் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறிய அவர், அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என்றார்.


