ஷா ஆலம், நவ 9- அடிப்படை வசதிகள் மற்றும் மாசுபாடு தொடர்பில் பொது மக்களிடமிருந்து கிடைத்த ஐந்து புகார்களுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் தீர்வு கண்டுள்ளது.
நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர எலியா மரினி டார்மின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பரிவு பயணத் திட்டத்தின் போது பொது மக்களிடமிருந்து அப்புகார்கள் கிடைக்கப்பெற்றதாக கிள்ளான் நகராண்மைக் கழகம் கூறியது.
ஜாலான் பெலாங்கியில் பொது வடிகால்களில் கழிவு நீர் கலப்பதால் ஏற்பட்ட மாசுபாடு பிரச்னை தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து நகராண்மைக் கழகம் அப்பகுதியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் அந்த ஊராட்சி மன்றம் குறிப்பிட்டது.
தாமான் தெலுக் காப்பாசில் விளையாட்டு சாதனங்களுக்கு ஏற்பட்ட சேதம் விரைவில் சரி செய்யப்படும் என்பதோடு ஜாலான் குண்டோரில் உள்ள பட்டறைக்கு எதிராக விரைவில் இட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர அனுமதியின்றி புனரமைப்பு செய்யப்பட்ட மற்றும் ரிசர்வ் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதையும் அது சுட்டிக்காட்டியது.


