கோலாலம்பூர், நவம்பர் 9 - பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், சேவை தடங்கள் காரணத்தைக் கண்டறிய தேவையான கால அவகாசம் காரணமாகவும் இன்று காலை 6 மணி முதல் கிளானா ஜெயா மற்றும் அம்பாங் பார்க் நிலையங்களுக்கு இடையிலான இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) சேவை ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கிளானா ஜெயா எல்ஆர்டி லைன் சேவையானது கோம்பாக் நிலையத்திலிருந்து டாமாய் நிலையம் வரையிலும், லெம்பா சுபாங் நிலையத்திலிருந்து புத்ரா ஹைட்ஸ் நிலையம் வரையிலும் மட்டுமே இயங்கும் என்று ரேபிட் ரயில் எஸ்டிஎன் பிஎச்டி இன்று அறிக்கையில் வெளியிட்டது.
"ரேபிட் ரயில் மூல பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட நிலையங்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில் பயணிகளுக்கு இலவச ஃபீடர் பஸ் சேவை வழங்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, எல்ஆர்டி கிளானா ஜெயா லைன் சேவையில் தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்பின் (ஏடிசி) மின்னணு கூறுகளுக்கு இடையூறு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
எல்ஆர்டி சேவை மற்றும் ஃபீடர் பேருந்து சேவையின் சமீபத்திய தகவல்களுக்கு பொதுமக்கள் ரேபிட் கேஎல் இன் சமூக ஊடக சேனல்கள் மற்றும் பல்ஸ் செயலியைப் பார்க்கவும்.


