ஷா ஆலம், நவ 9- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடும் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு ஏதுவாக விடுமுறையில் இருந்த போதிலும் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்புகளையும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி செவ்வனே ஆற்றி வருகிறார்.
இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். மாநில அரசின் நிர்வாகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நான் தொடர்ந்து எனது பணியை ஆற்றி வருகிறேன் என்று நேற்றிரவு ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமிருடின் குறிப்பிட்டார்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான அமிருடின், வேட்பு மனுத் தாக்கல் தினமான நவம்பர் 5ஆம் தேதி முதல் கோம்பாக் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதோடு மக்களின் பிரச்னைகளையும் பரிவோடு கேட்டறிந்து வருகிறார்.
எனினும், தமது இடைவிடாத பிரசாரப் பணிகள், சிலாங்கூர் மந்திரி புசார் என்ற முறையில் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எந்த வகையிலும் இடையூறை ஏற்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக தாம் நடந்து கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவதற்காக கடந்த 4 ஆம் தேதி முதல் அமிருடின் அதிகாரப்பூர்வ பணிகளிலிருது விடுப்பு எடுத்துள்ளதாக செய்தி வெளியானது.


