ஈப்போ, நவ 8- தேர்தல் பிரசாரத்தின் போது பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக குரோத நோக்கத்துடன் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக செய்யப்பட்ட புகார் தொடர்பில் கூனோங் செமாங்கோல் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் ரெஸ்மான் ஜக்காரியாவுக்கு எதிராக போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
தண்டனைச் சட்டத்தின் 505(பி) பிரிவு 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் இப்புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யுஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.
தேர்தல் பிரசாரம் ஒன்றில் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக ராஸ்மான் தீய நோக்கத்துடன் வெளியிட்ட அவதூறான கருத்துகள் அடங்கிய உரையின் காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பகிரப்பட்டு வருவதாக கூறி 32 வயது ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் சொன்னார்.
தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதோடு அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பேராக் மாநில பாஸ் கட்சித் தலைவருமான ரஸ்மான் பொது சந்தைப் பகுதியில் ஒலி பெருக்கியைக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்ட போது ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.


