ஷா ஆலம், நவ 8- சுமார் அறுபது லட்சம் மக்களுக்கு இலவச காப்புறுதி திட்டத்தை அமல்படுத்தும் தென்கிழக்காசியாவின் ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது இலவச காப்புறுதி திட்டத்திற்கு உண்டாகும் செலவை மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொள்வதாக பொதுத் தேர்தலில் கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளரான அவர் தெரிவித்தார்.
பிற (நாடுகளிலுள்ள) மாநிலங்களில் இது கேள்விப்படாத ஒரு திட்டம் என்பதோடு இத்தகைய திட்டத்தை இதுவரை அமல்படுத்தியதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரின் போது பலருக்கு காப்புறுதி பாதுகாப்பு இல்லை என்பதை அறிந்தோம். அவர்களின் எதிர்காலத்திற்கு இந்த காப்புறுதி திட்டம் பாதுகாப்பை வழங்கும் என்றார் அவர்.
ஆகவே, நேர்மை, கடும் உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் எங்கள் கொள்கைகள் மூலம் இந்த திட்டத்தை அமல்படுத்தினோம் என்று அவர் மேலும் சொன்னார்.
இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்குரிய அரசியல் முனைப்பும் எங்களிடம் இருந்தது என்று கம்போங் லக்ஸமணாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில மக்களுக்கு காப்புறுதி பாதுகாப்பை வழங்கும் இந்த இன்சான் திட்டம் குறித்த அறிவிப்பை மந்திரி புசார் கடந்த ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி அறிவித்தார். சுமார் 6,000 கோடி வெள்ளி காப்புறுதி பாதுகாப்பைக் கொண்ட இத்திட்டத்தின் வாயிலாக 60 லட்சம் சிலாங்கூர் மக்கள் பயன் பெறுவர்.
கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த இன்சான் காப்புறுதி திட்டத்தை நாடு முழுமைக்கும் தாம் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அமிருடின் சொன்னார்.


