கோலாலம்பூர், நவ 6- பதினைந்தாவது பொதுத் தேர்தலின் போது குழப்பத்தை ஏற்படுத்தும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக உளவு மற்றும் கண்காணிப்பு பணியில் சிறப்பு ஓப் சந்தாஸ் பிரிவை அரச மலேசிய போலீஸ் படை ஈடுபடுத்தவுள்ளது.
பொதுத் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி குண்டர் கும்பல்களுடன் தொடர்புடைய தரப்பினர் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை கட்டுப்படுத்துவதிலும் அந்த பிரிவு ஈடுபடும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை அனைத்து தரப்பினரும் முறையாக பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க தேர்தல் குற்ற கண்காணிப்பு குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்படும் என அவர் மேலும் சொன்னார்.
பிரசாரமும் தேர்தலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுவதை உறுதி செய்ய் தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் காவல் துறை காண்காணிப்பை மேற்கொள்ளும் என்றார் அவர்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் வாக்காளர்கள் தைரியமாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கும் 80,000 அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களை பணியமர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதோடு இனம் மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை எழுப்பக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.


