ANTARABANGSA

இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றி பெறுவேன்- ரமணன் நம்பிக்கை

5 நவம்பர் 2022, 8:30 AM
இரு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் சுங்கை பூலோ தொகுதியில் வெற்றி பெறுவேன்- ரமணன் நம்பிக்கை

சுங்கை பூலோ, நவ 5- இரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் மக்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும் வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவும் இயலும் என்று சுங்கை பூலோ தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.

பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான முகமது கைருடின் ஓத்மான் மற்றும் கோத்தா டாமன்சாரா தொகு சட்டமன்ற உறுப்பினர் ஷாதாரி மன்சோர் ஆகியோரின் செல்வாக்கு பிரசாரத்தின் போது தமக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

அவ்விரு மக்கள் பிரதிநிதிகளும் எனக்கு பக்கபலமாக உள்ளனர். இத்தேர்லில் வெற்றி பெற முடியும் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் நமக்கு சிறப்பான வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.

ஹராப்பான் கூட்டணியின் கோட்டையாக விளங்கும் சுங்கை பூலோ தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற சுங்கை பூலோ தொகுதிக்கான வேட்பு மனுத் தாக்கல் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுங்கை பூலோ தொகுதியில் இம்முறை ஏழு முனைப் போட்டி நிலவுகிறது. தேசிய முன்னணி சார்பில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இத்தொகுதியில் களமிறங்கியுள்ளார். மேலும் பெரிக்கத்தான் நேஷனல், பெஜூவாங், பார்ட்டி ராக்யாட் மலேசியா ஆகிய கட்சிகளோடு சுயேச்சைகளும் இங்கு போட்டியிடுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.