ஷா ஆலம், நவ 3- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் நாட்டை ஆள்வதற்குரிய வாய்ப்பு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு கிடைத்தால் மலேசியா எப்படி இருக்கும் என்பதற்கு சிலாங்கூர் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.
அந்த கூட்டணியின் நிர்வாகத் திறமைக்கு சிலாங்கூர் சிறந்த முன்மாதிரியாகவும் வெற்றியின் அடையாளமாகவும் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் போட்டியிட்டாலும் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனலைச் சேர்ந்த நமது எதிராளிகள் மாநில அரசை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கின்றனர். பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றியின் அடையாளம் சிலாங்கூர் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதை இது காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
முனைப்பு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். அதனால்தான் சிலாங்கூர் சிறந்த எடுத்துக்காட்டாகவும் மத்திய அரசை ஹராப்பான் கைப்பற்றினால் நாட்டின் நிர்வாகம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான முன்மாதிரியாகவும் சிலாங்கூர் விளங்குகிறது என அவர் தெரிவித்தார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற பக்கத்தான் ஹராப்பான் சார்பில் சிலாங்கூரில் போட்டியிடும் 22 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூரின் வெற்றியை கூட்டரசு நிலையிலும் பிரதிபலிக்கும் விதமாக தகுதியுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களை ஹராப்பான் கூட்டணி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நிறுத்தியுள்ளது என அமிருடின் குறிப்பிட்டார்.
மலேசியாவின் எதிர்காலத்தையும் நாட்டின் இலக்கையும் தீர்மானிக்கும் களமாக வரும் 15வது பொதுத் தேர்தல் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


