ஷா ஆலம், நவ 3- வரும் 15வது பொதுத் தேர்தலில் அனுபவமும் திறமையும் உள்ள 22 வேட்பாளர்களை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னிறுத்தியுள்ளது.
இங்குள்ள செக்சன் 7, ராஜா மூடா மூசா மண்டபத்தில் ஆதரவாளர்களின் பெரும் கரகோஷத்திற்கு மத்தியில் இந்த வேட்பாளர்களை சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கட்சி உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கும் ஏதுவாக வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கோம்பாக் தொகுதி ஹராப்பான் வேட்பாளருமான அமிருடின் கூறினார்.
புத்ரா ஜெயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கு சிலாங்கூரில் உள்ள 22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது முக்கியப் பணியாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, நாம் ஆற்றல், அனுபவம், புத்துணர்வும் கொண்டவர்களையும் புதியவர்களையும் வேட்பாளர்களாக தேந்தெடுத்துள்ளோம் என அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, சிலாங்கூர் மாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஹராப்பான் செயலாளர் முகமது கைருடின் ஓத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பன்முகப் பின்னணிகளைக் கொண்ட பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை தாங்கள் இத்தேர்தலில் முன்னிறுத்தியுள்ளதாக கூறிய அமிருடின், அவர்கள் வாக்காளர்களைக் கவர்வதற்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்கும் உரிய ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றார்.
அரசியல் போராட்டவாதிகள், சாலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களையும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களை நாங்கள் வேடபாளர்களாகத் தேர்வு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


