ஷா ஆலம், நவ 1- மாதம் 20 கனமீட்டர் நீரை இலவசமாக பெறுவதற்கு வகை செய்யும் ஆயர் டாருள் ஏசான் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும்படி சிலாங்கூர் மாநில மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்களை வரும் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எனும் www.airselangor.com எனும் அகப்பக்கம் வாயிலாக சமர்ப்பிக்கலாம் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பக்கத்தான் ஹராப்பான் தலைவர்களின் தலைமைத்துவத்தில் சிலாங்கூர் மக்கள் பல்வேறு அனுகூலங்களை பெற்று வருகின்றனர். அவற்றில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாக கருதப்படும் இலவச குடிநீர்த் திட்மும் ஒன்றாகும் என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 300,000 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலாங்கூர் மக்கள் இந்த இலவச குடிநீர்த் திட்டத்தின் வழி பயன்பெற்று வருவதாகவும் மேலும் 100,000 பேர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தொடங்கி இலவச குடிநீர் திட்டத்தில் பங்கு பெறுவதற்கான வருமான வரம்பு 4,000 வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளியாக உயர்த்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு உண்டாகும் 3 கோடி வெள்ளி செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது என்றார் அவர்.
இந்த டாருள் ஏசான் இலவச நீர் விநியோகத் திட்டத்தில் பங்கு பெறுவதற்கான நிபந்தனைகள் வருமாறு-
- சிலாங்கூரில் வசிக்கும் மலேசிய பிரஜையாக இருக்க வேண்டும்.
- மாத குடும்ப வருமானம் 5,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- தனி மீட்டர் கொண்ட குடியிருப்பாக இருக்க வேண்டும்.
- ஒருவர் ஒரு குடியிருப்புக்கு அல்லது ஒரு மீட்டர் கணக்கிற்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும்.


