ECONOMY

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஐ-சீட், சித்தம் திட்டங்கள் பேருதவி- இந்திய வணிகர்கள் புகழாரம்

27 அக்டோபர் 2022, 3:32 AM
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஐ-சீட், சித்தம் திட்டங்கள் பேருதவி- இந்திய வணிகர்கள் புகழாரம்

ஷா ஆலம், அக் 27 – சிலாங்கூர் அரசின் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா (ஐ-சீட்)  மற்றும் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்) மூலம் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை இந்திய வணிகர்கள் பெற்றுள்ளனர்.

வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்கும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களில் ஒருவராகத் திகழ்கிறார் கோல லங்காட், ஜென்ஜாரோம் பகுதியில் சிகையலங்கரிப்பு நிலையத்தை நடத்தி வரும் ஜி.ராஜீவ்.

ஐ-சீட் திட்டத்தின் மூலம் சுமார் 4,000 வெள்ளி மதிப்பிலான சுழலும் முடிதிருத்தும் நாற்காலிகள், கண்ணாடிகள், முடி வெட்டும் கருவிகள் மற்றும் கிளிப்பர்கள் உள்ளிட்ட பொருள்களைத் தாம் பெற்றதாக அவர் சொன்னார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒரு நிலையத்துடன் தொடங்கிய தனது வர்த்தகம் தற்போது ஜென்ஜாரோம் மற்றும் பந்திங்கில் மேலும் இரு கிளைகளைத் திறக்கும் அளவிற்கு விரிவாக்கம் கண்டுள்ளதாக 31 வயதான ராஜீவ் கூறினார்.

மாநில அரசின் இந்த உதவியின் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க முடிந்ததோடு கூடுதல் வருமானத்தையும் பெற முடிந்தது. இதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு மேலும் இரு கிளைகளைத் திறந்துள்ளேன் என்றார் அவர்.

இளைஞர்களையும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரையும் வணிகத்தில் ஈடுபட ஊக்குவிப்பு வழங்கி வரும் மாநில அரசு மற்றும் ஐ-சீட் நிர்வாகத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.

ஐ-சீட் மற்றும் சித்தம் திட்டங்களால் பயனடைந்த சுமார் 3,000 சிறு வணிகர்களில் ராஜீவும் ஒருவராவார்.

நவம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலக் கட்டத்தில் இத்திட்டங்களின் வாயிலாக பயன் பெற்றவர்களின் கருத்துகள் பின்வருமாறு:

• நான் முதன்முதலில் சித்தம் கருவிகள் மானியத்திற்கு அணுகிய போது  ​​உணவு டிரக்கிற்கான கடனுக்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு திட்டங்களுக்கும் என்னால் உதவி பெற முடிந்தது. - பிரியாணி விற்பனையாளர் எஸ்.ரமேஷ்

•  மாநில அரசின் உதவி எனக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நான் எனது சொந்த நிதியைப் பயன்படுத்தியிருந்தால் அதன் மதிப்பு 3,800 வெள்ளியாக இருந்திருக்கும். அந்தத் தொகையைச் சேமிக்க அதிக எனக்கு அதிக காலம் பிடிக்கும் - கார் கழுவும் மைய நடத்துநர் ஆர் ராஷ்வின்

• எனது வாடிக்கையாளர்களிடமிருந்து நான் பெற்ற ஆர்டர்களை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டேன். ஆனால் சித்தம் நிறுவனத்திடம் இருந்து பெற்ற தையல் இயந்திரம் மூலம் காத்திருப்பு காலம் குறைக்கப்பட்டதால் எனது வாடிக்கையாளர்கள் அதிக திருப்தி அடைந்துள்ளனர். - பாரம்பரிய ஆடை தையல் கலைஞர் எம் ராஜேஸ்வரி

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.