ஷா ஆலம், அக் 22- கோலாலம்பூரில் நடைபெறும் 2022 பாரா மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) 76 பதக்கங்களை வெல்ல சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த பிரத்தியேகப் போட்டியில் குறைந்தபட்சம் ஆறாவது இடத்தை பிடிக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை இயக்குநர் அஸூரா சர்பின் கூறினார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் பேராக்கில் நடைபெற்ற பாரா சுக்மா போட்டியில் சிலாங்கூர் அணி எட்டாவது இடத்தைப் பிடித்தது. சிலாங்கூர் பாரா சுக்மா போட்டியாளர்களின் திறன் ஆண்டுக்கு ஆண்டு மேம்பாடு கண்டு வருகிறது. கடந்த 2014இல் பெர்லிசில் நடைபெற்ற இந்த போட்டியின் போது சிலாங்கூர் அணி 30 பதக்கங்களுடன் 11வது இடத்தை மட்டுமே பிடித்தது என்று அவர் சொன்னார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சரவா மாநிலத்தில் நடைபெற்ற போட்டியில் 38 பதக்கங்களுடன் 9வது இடத்தை பிடித்தது. அடுத்தப் போட்டியில் 61 பதக்கங்கள் கிடைத்தன என்று ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்போட்டியில் சிலாங்கூர் அணிக்கு தலைமையேற்றுள்ள அஸூரா தெரிவித்தார்.
இந்த பாரா சுக்மா போட்டியில் அம்பு எறிதால், பூப்பந்து எடை தூக்குதல், நீச்சல், பிங் போங், தட்டு எறிதல், சதுரங்கம் உள்ளிட்ட பத்து போட்டிகள் நடைபெறுகின்றன.
மொத்தம் 294 பதக்கங்களைக் கொண்ட இப்போட்டியில் சிலாங்கூர் அணி சார்பில் 96 விளையாட்டாளர்களும் 46 அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.


