சுபாங் ஜெயா, அக் 14- அடுத்தாண்டில் விவேக மற்றும் நிலையான நகர அந்தஸ்தைப் பெறுவதற்காக சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 31 கோடியே 60 லட்சம் வெள்ளியைச் செலவிட உத்தேசித்துள்ளது.
அந்த ஒதுக்கீட்டில் பெரும்பகுதி தொகை நிர்வாகச் செலவினங்களுக்காகவும் எஞ்சியத் தொகை மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் என்று டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.
சமூக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட கருத்து கேட்பு நிகழ்வின் வாயிலாக உருவாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் அங்கீகாரத்திற்காக விரைவில் மாநில அரசு ஆட்சிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வருமானத்துடன் ஒப்பிடுகையில் செலவு அதிகமாக இருந்தது. ஆனால், இம்முறை சமநிலையான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறோம் என்றார் அவர்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை மாநகர் மன்றமே தயாரித்தாலும் மாநில அரசிடம் அது சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என அவர் விளக்கினார்.
இங்குள்ள எம்.பி.எஸ்.ஜே. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற குறு தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் முதன் முறையாக 30 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் சமூக மானியத்தை திட்டத்தை இவ்வாண்டு அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இந்த மானியத்திற்கு குடியிருப்பாளர் சங்கங்கள் அல்லது அரசு சாரா அமைப்புகள் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


