ஷா ஆலம், அக் 13- புறாக்களுக்கு விஷமிட்ட குற்றத்திற்காக இரு இந்தோனேசிய ஆடவர்களுக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தலா ஆறு மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஃபாதுர் ரோஸி அர்சிஜோ (வயது 22) மற்றும் அப்துல் ரஹ்மான் சவுஜி ஆகிய இருவருக்கும் நீதிபதி ரஸியா கசாலி இத்தண்டனையை வழங்கினார்.
துப்புரவுப் பணியாளர்களான அவ்விருவரும் கைது செய்யப்பட்ட தினமான ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி இத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இதனிடையே, இவ்விரு இந்தோனேசியர்களுடன் கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்ட நோர் ஹஸிரா மசுவான்(வயது 32) மற்றும் நுருள் நஜ்வா ஷபிகா ஆகியோருக்கு எதிரான நிர்வாக வழக்கு தேதியை வரும் நவம்பர் 17ஆம் தேதிக்கு நீதிபதி நிர்ணயித்தார்.
நிர்வாகப் பிரிவு உதவியாளர்களான அவ்விரு பெண்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மாலை 3.53 மணியளவில் ஷா ஆலம் பத்து தீகாவிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் எதிரே இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.


