ECONOMY

லேசான தாக்கம் கொண்ட கோவிட்-19 நோயாளிகள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கலாம்- நோர் ஹிஷாம்

13 அக்டோபர் 2022, 9:29 AM
லேசான தாக்கம் கொண்ட கோவிட்-19 நோயாளிகள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கலாம்- நோர் ஹிஷாம்

கோல திரங்கானு, அக் 13- கடுமையான பாதிப்பைக் கொண்டிராத கோவிட்-19 நோயாளிகள் வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கவிருக்கும் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை சம்பந்தப்பட்ட நோயாளிகள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

தேர்தல் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்துடன் தாங்கள் சந்திப்பு நடத்தி எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான நிர்வாக நடைமுறைகளில் சேர்க்க வேண்டிய சில அம்சங்களை பரிந்துரைத்துள்ளதாக அவர் சொன்னார்.

மற்ற வாக்காளர்களுடன் சேராமலிருப்பதற்காக கோவிட்-19 நோயாளிகளுக்காக சிறப்பு வாக்களிப்பு வழி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிருமி நாசினி தெளிப்பு தவிர்த்து முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்படும். பி.பி.இ. எனப்படும் முழு பாதுகாப்பு உடை அணிவது இந்த எஸ்.ஒ.பி. விதிகளில் உள்ளடக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள இஸ்லாமிய நாகரீக பூங்காவில் 2022 ஆம் ஆண்டிற்கான பார்வை தின நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, வெள்ளத்தை எதிர்கொள்வதற்கான முழு முன்னேற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ள தகவலையும் டான்ஸ்ரீ நோர் ஹிஷாம் வெளியிட்டார்.

தற்காலிக நிவாரண மையங்களில் சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்துவது மற்றும் பாதிப்புக்கான சாத்தியம் அதிகம் கொண்ட நோயாளிகள் உள்ள இடங்களை அடையாளம் காண்பது ஆகியவையும் அதில் அடங்கும் என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.