ஷா ஆலம், அக் 13: இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வெள்ளப் பெருக்கை கவனத்தில் கொண்டு மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்துடன் ஒரே நேரத்தில் மாநில சட்ட மன்றத்தையும் கலைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவலில் இருந்து தனது நிர்வாகம் கற்றுக்கொண்டது, எப்போதும், மக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நாம் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்,'' என்றார்.
நாடாளுமன்றம் போல் மாநில சட்டமன்றம் கலைக்கப்படாமல் இருக்க நேற்று மாண்புமிகு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல் அளித்தார்.
மாநில நிர்வாகம் தொடர வேண்டும், இதன் மூலம் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அக்டோபர் 5 அன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றம், இந்த ஆண்டு 15வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், அது ஆளும் மூன்று மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகியவைகளின் சட்டப்பேரவைகளை கலைப்பதில்லை என முடிவு செய்தது.


