ஈப்போ, அக்டோபர் 13 - ஜாலான் தம்புனில் உள்ள போக்குவரத்து விளக்கு சந்திப்பு அருகே கண்டெடுக்கப்பட்ட அழுகிய சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அப்பெண் கழுத்து நெரிக்கப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.
பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.
“இந்த வழக்கை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கை மற்றும் விரலில் பச்சை குத்தப்பட்டதன் அடிப்படையில், சிதைந்த உடல் 23 வயதுடைய உள்ளூர் பெண்ணுடையது என்று நம்பப்படுகிறது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முகமட் யூஸ்ரி, சம்பவம் பற்றிய தகவல்களுடன், விசாரணைகளில் உதவ, ஈப்போ மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரி ஏஎஸ்பி சுவா ஸீ யுவான்-ஐ 012-6195312 என்ற கை பேசி வழி தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.
இன்று அதிகாலை 5.25 மணியளவில் கார் ஒன்று வடிகாலில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட போது, புதருக்குள் பெண்ணொருவரின் சிதைந்த சடலம் காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவல் கிடைத்ததும் விபத்து குறித்து விசாரணை நடத்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தபோது, புரோட்டான் ஈஸ்வரா ஏரோபேக் கார் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமார் இரண்டு மீட்டர் தொலைவில் புதர்களுக்குள் அழுகிய நிலையில் உடலை கண்டெடுத்ததாக முகமட் யூஸ்ரி கூறினார்.


