கிள்ளான், அக் 13- சுமார் அறுபது ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிந்து வந்த பாரிசான் நேஷனல் அரசாங்கம் பெரிக்கத்தான் அரசும் தோட்டத் தொழிலாளர்களின் நலனை காக்கும் பொறுப்பிலிருந்து தவறி விட்டதாக கெஅடிலான் கட்சியின் தோட்டத் தொழிலாளர் பிரிவுத் தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
தோட்டப்பள்ளிகளும் மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் பாட்டாளிகளின் பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெற முடியாது போய்விட்டதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் குற்றஞ்சாட்டினார்.
தோட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் நிலப்பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தின் மெத்தனம் காரணமாக அவர்களின் நலனும் குடியிருப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் குறிப்பிட்டார்.
இந்த அறுபது ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, தமிழ்ப்பள்ளி மற்றும் ஆலயப் பிரச்னைகளுக்கு எந்த தீர்வும் ஏற்படவில்லை என்பதோடு அவர்களின் எதிர்காலமும் சிறப்பானதாக அமையவில்லை என்று இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் சொன்னார்.
கெஅடிலான் மற்றும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தோட்டத் தொழிலாளர்கள் உள்பட நாட்டிலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருவதையும் குணராஜ் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சில பிரச்னைகளுக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படாத போதிலும் பக்கத்தான் தலைவர்கள் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடு இப்பிரச்னைகளுக்கு நிச்சயமாக தீர்வினை ஏற்படுத்தித் தரும் என அவர் உறுதியுடன் கூறினார்.


