ஷா ஆலம், அக் 8 - சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை கிள்ளான் மற்றும் சுங்கை ராசாவ் ஆற்றோரங்களில் இரு விதங்களில் பயன்படக்கூடிய நீர் சேகரிப்பு குளங்கள் சுமார் 200 கோடி வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும்.
அந்த குளங்கள் வெள்ளப் பிரச்னையைக் களைவதற்கும் சுத்திகரிக்கப்படாத நீரை சேகரித்து வைப்பதற்கும் பயன்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.
நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் மொத்தம் 1,500 கோடி வெள்ளி மதிப்பில் வரும் 2030ஆம் ஆண்டு வரைக்குமான நீண்ட கால வெள்ளத் தணிப்புத் திட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 70 கோடி வெள்ளியை உள்ளடக்கிய இத்திட்டத்தின் பெரிய பகுதி வரும் 2023ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் நேற்று 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
கெடா மாநிலத்தின் நிகழ்ந்ததைப் போன்ற காட்டாற்று வெள்ளம் மற்றும் சகதி வெள்ளம் மீண்டும் நிகழாதிருக்க நாடு முழுவதும் 46 இடங்களில் சோபோ நீர்த்தேக்கங்கள் 56 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


