ECONOMY

தந்தையின் நண்பர், வீட்டுப் பணிப்பெண்ணால் சித்திரவதை- மூன்று வயது குழந்தை பரிதாப மரணம்

4 அக்டோபர் 2022, 4:35 AM
தந்தையின் நண்பர், வீட்டுப் பணிப்பெண்ணால் சித்திரவதை- மூன்று வயது குழந்தை பரிதாப மரணம்

ஜோகூர் பாரு, அக் 4- தந்தையின் நண்பர் மற்றும் அந்நிய பிரஜையான வீட்டுப் பணிப்பெண் ஆகியோரால் சித்திரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் மூன்று வயது ஆண் குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த துயரச் சம்பவம் இங்குள்ள தாமான் ஸ்கூடாய், ஜாலான் ரியா 2 எனுமிடத்தில் நிகழ்ந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஜமான் மாமாட் கூறினார்.

விற்பனை முகவராக பணிபுரியும் அக்குழந்தையின் தந்தை தனது இரு குழந்தைகளையும் பராமரிப்பதற்கு தனது 28 வயது நண்பர் மற்றும் 40 வயதுடைய அந்நிய வீட்டுப் பணிப்பெண்ணின் உதவியை நாடியிருந்ததாக அவர் சொன்னார்.

அந்த குழந்தையின் தந்தை சிங்கப்பூரிலும் அவரின் தாயார் யோங் பெங் நகரில் வேலை செய்து வந்துள்ளனர். தங்களின் இரு குழந்தைகளையும் மாதம் 2,800 வெள்ளி கட்டணத்தில் கடந்த மூன்று மாதங்களாக அவ்விருவரின் பாதுகாப்பில் விட்டுள்ளனர் என்றார் அவர்.

அந்த ஆண் குழந்தையின் உடலில் காயங்களும் சிராய்ப்புகளும் உள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய டத்தோ கமாருள் ஜமான், எனினும், இதன் தொடர்பில் விரிவான தகவல்களைப் பெறுவதற்கு சவப்பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக சொன்னார்.

பல குற்றப் பின்னணிகளைக் கொண்ட அந்த ஆடவரும் வீட்டுப் பணிப்பெண்ணும் நேற்று மதியம் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பலரிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதோடு கண்காணிப்பு கேமராவையும் சோதனையிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.