ECONOMY

கடன் விவகாரம்- பட்டப்பகலில் கும்பல் ஒன்றினால் வர்த்தகர் கடத்தல்

30 செப்டெம்பர் 2022, 9:22 AM
கடன் விவகாரம்- பட்டப்பகலில் கும்பல் ஒன்றினால் வர்த்தகர் கடத்தல்

கோலாலம்பூர், செப் 30- பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் கும்பல் ஒன்றினால் வர்த்தகர் ஒருவர் வாகனம் ஒன்றில் கடத்தப்பட்டார். நேற்று அம்பாங், ஜாலான் பண்டானில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அந்த வர்த்தகர் லேசான காயங்களுக்குள்ளானார். கடன் விவகாரம் தொடர்பில் அவ்வாடவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

கடத்தப்பட்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் அவ்வாடவர் கிள்ளானில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அவ்வாடவர் நேற்று இரவு 10.45 மணியளவில் அம்பாங் ஜெயா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு தனியாகச் சென்று கொண்டிருந்த அந்த வணிகரை கும்பல் ஒன்று மடக்கி  டோயோட்டா வெல்பையர் ரக வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாரூக் ஏஷாக் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.03 மணிக்கு தாங்கள் புகாரைப் பெற்றதாக கூறிய அவர், தாம் கிள்ளானில் விடுவிக்கப்பட்டதாக கடத்தப்பட்ட ஆடவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார் என்றார்.

கால் மற்றும் முகத்தில் லேசான காயங்களுக்குள்ளான அந்த ஆடவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றதாக பாரூக் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கும் நோக்கில் கடத்தியது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 365வது பிரிவின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

அந்த ஆடவர் கடத்தப்படும் தொடர்பான காணொளி நேற்று சமூக ஊடங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.