ஷா ஆலம், செப் 30- எட்டாவது சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டில் (சிப்ஸ் 2022) 35 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக பரிவர்த்தனையை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த சிப்ஸ் மாநாடு தொடங்கப்பட்டதிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று காலம் தவிர்த்து இதர ஆண்டுகளில் தொடர்ச்சியாக கூடுதல் பரிவர்த்தனை மதிப்பை பதிவு செய்து வருவதாக அவர் சொன்னார்.
சிப்ஸ் மாநாட்டின் தொடக்க காலத்தில் நாம் 400 கண்காட்சிக் கூடங்கள் வாயிலாக 18 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனையை பதிவு செய்தோம். எனினும், கோவிட்-19 பெருந்தொற்று பரவிய சமயத்தில் நம்மால் அதிகமாக எதுவும் செய்ய இயலவில்லை. இணையம் வாயிலாக மட்டுமே மாநாட்டை நடத்தினோம் என்றார் அவர்.
இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட போதிலும் சிப்ஸ் மாநாடு 10 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி பரிவர்த்தனையை பெற்றது என்று அண்மையில் தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டில் இணையம் வாயிலாகவும் முதலீட்டாளர்களின் நேரடி பங்கேற்பின் மூலமாகவும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நான்கு நாள் மாநாட்டில் 25,410 பேர் கலந்து கொண்டது வியக்கத்தகு சாதனையாக உள்ளது என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் அனைத்துலக வாணிக மையத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள இந்த மாநாட்டை சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டத்தோ தெங் உள்ளிட்ட பிரமுகர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர்.


