கோலாலம்பூர், செப் 30- ஆற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது தவறி நீரில் விழுந்த பதின்ம வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம், ஜாலான் புக்கிட் லஞ்சோங், கம்போங் புக்கிட் லாஞ்சோங்கில் நேற்று மாலை நிகழ்ந்தது.
வான் முகமட் ஹபீக் வான் இஸ்மாயில் (வயது 13) என்ற அச்சிறுவனின் சடலம் இன்று காலை 8.21 மணியளவில் அவன் விழுந்த இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாலை 4.56 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறினார்.
அப்பகுதியில் கள கண்காணிப்பை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் பின்னர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை நீர் மீட்புக் குழுவிடம் ஒப்படைப்பததாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை 8.00 மணியளவில் இரண்டு படகுகளைப் பயன்படுத்தி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது, சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அவர் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் - அச்சிறுவனின் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
அச்சிறுவனின் சடலம் தீயணைப்பு கட்டுப்பாட்டு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என நோரஸாம் தெரிவித்தார்.


