கோலாலம்பூர், செப் 30- அடுத்த மாதம் 3 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான மூன்றாம் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இந்த தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய அம்சமாக விளங்கும்.
இந்த 2023 ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதாவை (பட்ஜெட்) நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் துங்கு ஜப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தாக்கல் செய்வார் என நாடாளுமன்ற அகப்பக்கம் கூறியது.
“கெலுவார்கா மலேசியாவின் நிலையான சமூக பொருளாதாரத்தை நோக்கி மீட்சியை வலுப்படுத்துதல், சீர்திருத்தங்களை எளிதாக்குதல்” எனும் கருப்பொருளிலான இந்த வரவு செலவுத் திட்டம் வரும் அக்டோபர் 11 முதல் 26 வரை கொள்கை நிலையில் விவாதிக்கப்படும்.
செயல்குழு நிலையிலான விவாதங்கள் வரும் நவம்பர் 3 முதல் 23 வரை நடைபெறும். அதன் பின்னர் மக்களவை அந்த மசோதாவை நிறைவேற்றும்.
இந்த கூட்டத் தொடரை அக்டோபர் 26 முதல் டிசம்பர் 15 வரை 31 நாட்களுக்கு நடத்த முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் வரவு செலவுத் திட்டத்தை விரைந்து தாக்கல் செய்வதற்கு ஏதுவாக கூட்டத் தொடர் முன்கூட்டியே நடத்தப்படுகிறது.
நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்ட சில தினங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இதுவே 14 நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத் தொடராக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


